வேளாண் படிப்பு நுழைவுத் தேர்வு எப்போது?
தேசிய தேர்வு முகமை நடத்தும், வேளாண் துறையின் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் செப்டம்பர், 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லுாரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; போட்டித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த, வேளாண் துறையின் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த நுழைவுத் தேர்வு, அடுத்த மாதம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
:என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தும், வேளாண் துறையின் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, 'ஆன்லைன்' மூலம், செப்டம்பர், 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும். ஆன்லைன் தேர்வு மையத்தில், சமூக இடைவெளியை பின்பற்றி, மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக, இந்த தேர்வு, இரண்டு நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் தேதிகள், விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது